போக்சோ வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஆசிரியர் மர்ம உயிரிழப்பு – மருத்துவமனை முன் உறவினர்கள் போராட்டம்
தருமபுரி மாவட்டத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஆசிரியர், சிறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நல்லம்பள்ளி அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவியிடம், கடந்த மாதம் 27ஆம் தேதி ஆசிரியர் மணிவண்ணன் பாலியல் ரீதியான அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இந்த புகாரின் அடிப்படையில், கடந்த 15ஆம் தேதி பள்ளி தலைமையாசிரியர் அளித்த மனுவை தொடர்ந்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆசிரியர் மணிவண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், காவலில் இருந்த மணிவண்ணன் திடீரென மர்மமான சூழ்நிலையில் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து, அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால், ஆசிரியரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறிய அவரது உறவினர்கள், மருத்துவமனை வளாகத்தில் திரண்டு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.