ரேபிஸ் தொற்றால் இளைஞர் மரணம் – அலட்சியம் பறித்த உயிர்
அரக்கோணம் அருகே, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாய் கடித்த சம்பவத்தை பொருட்படுத்தாமல் உரிய மருத்துவ சிகிச்சை பெறாமல் இருந்த இளைஞர், தற்போது ரேபிஸ் நோயால் உயிரிழந்தது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள மோசூர் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர் திவாகர் என்பவரை, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாய் கடித்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் அவர் தடுப்பூசி உள்ளிட்ட தேவையான சிகிச்சைகளை மேற்கொள்ளாமல் அலட்சியமாக இருந்துள்ளார்.
சமீப காலமாக திவாகருக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு ரேபிஸ் நோய் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக திவாகரை சென்னை அரசு மருத்துவமனைக்கு மாற்றி அனுப்பினர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், திவாகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.