திராவிட மாடல் ஆட்சிக்கு முடிவு காண பொதுமக்கள் விழிப்புணர்வுடன் ஒன்றிணைய வேண்டும் – வேலூர் இப்ராஹிம்
இந்துக்களின் ஆன்மிக மற்றும் வழிபாட்டு தலங்களை அவமதிக்கும் திராவிட மாடல் நிர்வாகத்தை மாற்ற தமிழக மக்கள் பரந்த அளவில் விழிப்புணர்வு பெற வேண்டியது அவசியம் என பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பேருந்து நிலையம் அருகே, பாஜக மற்றும் அதிமுக இணைந்து நடத்திய கண்டனப் போராட்டம் நடைபெற்றது. வேலூர் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, வாலாஜா நகராட்சி நிர்வாகத்தின் செயலிழப்புகளை எதிர்த்து முழக்கங்கள் எழுப்பினர்.
போராட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த வேலூர் இப்ராஹிம், பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்காமல், வரும் நான்கு மாதங்களில் மக்களின் வரி பணத்தை எவ்வாறு தவறாக பயன்படுத்தலாம் என்பதிலேயே நகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தி வருகிறது என கடுமையாக குற்றம் சாட்டினார்.
மேலும், நகராட்சியில் நிலவும் குறைபாடுகளை 20 நாட்களுக்குள் சரி செய்யத் தவறினால், நகர்மன்றத் தலைவரின் இல்லத்தை முற்றுகையிட்டு பாஜக மற்றும் அதிமுக சார்பில் தீவிர போராட்டம் நடத்தப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.