புத்தாண்டு கொண்டாட்டங்களில் மதுபான இடங்களுக்கு சிறார்கள் அனுமதி இல்லை – உயர்நீதிமன்றம் உத்தரவு
புத்தாண்டு விழாக்களின் போது மது அருந்தப்படும் இடங்களுக்கு குழந்தைகள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட சிறார்களை அழைத்துச் செல்லக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவை மீறும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டங்களில் நட்சத்திர விடுதிகள் மற்றும் மதுபான கூடங்களில் குழந்தைகள் அனுமதிக்கப்படுவதாகக் கூறி, காமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், எழும்பூரில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஹோட்டலில் கடந்த ஆண்டு நடைபெற்ற புத்தாண்டு நிகழ்ச்சியில், சிறார்கள் மற்றும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் கலந்து கொண்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம், புத்தாண்டு கொண்டாட்ட காலத்தில் நட்சத்திர விடுதிகள் மற்றும் உணவகங்களில் உள்ள மதுபானம் பரிமாறப்படும் பகுதிகளுக்கு குழந்தைகள் மற்றும் சிறார்களை அழைத்துச் செல்லக் கூடாது எனத் தெளிவாக உத்தரவிட்டது.
மேலும், இந்த உத்தரவை மீறி புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்துறை செயலாளர், சென்னை மாநகர காவல் ஆணையர் மற்றும் குழந்தைகள் நல ஆணையருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.