மகளிர் உரிமைத் தொகை திட்டம் – அரசுக்கு அதிகரிக்கும் நிதிச் சுமை
மகளிர் உரிமைத் தொகை திட்டம் காரணமாக மாநில அரசுக்கு உருவாகியுள்ள நிதிச் சிக்கல், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பயிர் சேத நிவாரணத்தில் தாமதத்தை ஏற்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் டிட்வா புயலைத் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக 10க்கும் அதிகமான மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி கடுமையாக சேதமடைந்தன. புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இதனை அடுத்து, சேதமடைந்த நெல் பயிர்களுக்கு ஏக்கருக்கு 8,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என வருவாய்த் துறை அமைச்சர் அறிவித்தார். ஆனால், இதுவரை விவசாயிகளுக்கு அந்த நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை என்றும், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் சமீபத்திய விரிவாக்கத்தால் ஏற்பட்ட கூடுதல் நிதிச்சுமையே இதற்குக் காரணம் என நிதித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மாநில அரசுக்கு கிடைக்கும் வருவாயின் பெரும்பகுதி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய செலவுக்கே செலவிடப்படுவதாகவும், அதனுடன் இணைந்து மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டதால் அரசுக்கு கடும் நிதி அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த நிலை தொடர்ந்தால், வரும் ஜனவரி மாதத்தில் அரசு பணியாளர்களுக்கான சம்பளப் பணப்பரிவர்த்தனையிலும் சிக்கல் உருவாகக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சூழ்நிலையை கட்டுப்படுத்தி விவசாயிகளுக்கு பயிர் சேத இழப்பீட்டை விரைவில் வழங்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.