தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு செயல்படுத்தவில்லை
அரசு பணியாளர்களின் ஓய்வூதியம் தொடர்பான தேர்தல் உறுதிமொழிகளை திமுக அரசு இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே, விசிக பொதுச் செயலாளர் வன்னிஅரசு தாயாரின் நினைவு படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட திருமாவளவன், புஷ்பம் ரத்தினசாமியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பணியாளர்கள் நிரந்தர பணியிடம் கோரி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டார்.
மேலும், அரசு ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்தில் பல குறைபாடுகள் இருப்பதாகவும், தேர்தல் காலம் நெருங்கி வரும் நிலையில் அவற்றை சரிசெய்ய முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அதோடு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த அரசு தீவிரமாக செயல்பட வேண்டும் என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.