கிறிஸ்துமஸ், பள்ளி தொடர் விடுமுறை: ஆம்னி பேருந்து கட்டண உயர்வு – பயணிகள் அதிர்ச்சி
பள்ளிகளுக்கான தொடர் விடுமுறையும், கிறிஸ்துமஸ் பண்டிகையும் நெருங்கியுள்ள நிலையில், ஆம்னி பேருந்து நிறுவனங்கள் கட்டணங்களை கடுமையாக உயர்த்தியுள்ளதால் பயணிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
விடுமுறையை முன்னிட்டு பெருமளவிலான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ள சூழலில், இதனை சாதகமாக பயன்படுத்தி வரும் 23ஆம் தேதி முதல் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, சென்னையிலிருந்து நெல்லைக்கு செல்லும் பேருந்துகளில் வழக்கமாக வசூலிக்கப்பட்டு வந்த ரூ.1,400 கட்டணம் தற்போது ரூ.4,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல், சென்னை–கோவை வழித்தடத்தில் ரூ.1,200 வரை இருந்த கட்டணம் ரூ.5,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை–மதுரை செல்லும் பேருந்துகளில் சாதாரண நாட்களில் ரூ.1,100 வரை இருந்த கட்டணம் தற்போது அதிகபட்சமாக ரூ.4,000 வரை வசூலிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, நாகப்பட்டினம், திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்களும் மூன்று மடங்காக உயர்ந்துள்ளதால், சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.