மதச்சார்பின்மை பெயரில் திமுக ஆட்சியின் இரட்டை நிலைப்பாட்டுக்கான காலம் தொடங்கியுள்ளது – நயினார் நாகேந்திரன்
மதச்சார்பின்மை என்ற பெயரில் திமுக அரசு மேற்கொண்டு வரும் இரட்டை அரசியல் இப்போது வெளிச்சத்திற்கு வந்துவிட்டதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சந்தனக்கூடு திருவிழாவிற்கு மட்டும் அனுமதி வழங்கி, மற்ற மத நிகழ்வுகளில் தடைகள் விதிப்பது திமுக அரசின் போலியான மதச்சார்பின்மையை வெளிப்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.
தர்காவில் கொடி ஏற்றும் நிகழ்வுக்கு மட்டும் அனைவருக்கும் அனுமதி வழங்கப்படுவது தான் திமுக அரசு கூறும் சமத்துவமா? என கேள்வி எழுப்பிய அவர், இந்த நடைமுறை ஒருதலைப்பட்சமானது என சாடியுள்ளார்.
மேலும், திருப்பரங்குன்றத்தில் திமுக அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக எழுந்த மக்களின் குரல் இன்னும் ஆரம்ப கட்டமே என்றும், இது தொடர்ச்சியாக வலுப்பெறும் என்றும் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
போலி மதச்சார்பின்மையை முன்னிறுத்தும் திமுக அரசை, உரிய நேரத்தில் தமிழக மக்கள் அரசியல் ரீதியாக தோற்கடிப்பார்கள்; அந்த நாள் தொலைவில் இல்லை எனவும் அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.