சென்னையில் வாக்காளர் பட்டியல் தொடர்பான சிறப்பு முகாம் தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைப்பெறுகிறது
சென்னையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், விவர திருத்தம் மற்றும் நீக்குதல் தொடர்பான சிறப்பு முகாம் தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் சிறப்பு தீவிர சீராய்வு (SIR) பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை மாநிலத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில் தமிழகம் முழுவதும் சுமார் 97 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் அதிக அளவில் நீக்கங்கள் சென்னை மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து மொத்தம் 14 லட்சத்து 25 ஆயிரம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதில், ஒரு லட்சத்து 56 ஆயிரம் பேர் மட்டுமே உயிரிழந்தவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதமுள்ள பெரும்பாலானோர் முகவரி மாற்றம் அல்லது தொகுதி மாற்றம் செய்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாக்காளர் விவரங்களில் மாற்றங்கள் செய்யும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பில் சனிக்கிழமை நகரம் முழுவதும் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. வார்டு அடிப்படையிலான வாக்காளர் பதிவு அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி மையங்கள் உள்ளிட்ட மொத்தம் 3,718 இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக, இன்று இரண்டாவது நாளாகவும் வாக்காளர் பட்டியல் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.