“பொருநையைப் போற்றுகிறேன்” என்ற பெயரில் புகைப்பட விளம்பரத்திற்கே முதல்வரின் கவனம் – நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்
“பொருநையைப் போற்றுகிறேன்” என்ற திட்டத்தின் பெயரில் புகைப்படங்கள் எடுப்பதிலேயே முதலமைச்சர் ஸ்டாலின் அதிக ஆர்வம் காட்டுகிறார் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் முன்வைத்துள்ளார்.
நெல்லை மாவட்டத்திற்கு வருகை தந்து பல்வேறு வளர்ச்சி திட்டங்களைத் தொடங்கி வைத்ததாக முதல்வர் பெருமை பேசிவரும் நிலையில், கல்வி தொடர்பான உண்மையான நிலைமை குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தென்காசி மாவட்டம் கூடலூர் அரசு பள்ளியில் புதிய கட்டடங்களைத் தொடங்கி வைத்த நிகழ்வு முதலமைச்சருக்கு நினைவில் உள்ளதா என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்த கட்டடங்களில் சுற்றுச்சுவர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளே இல்லாத நிலையில், கூடுதல் வகுப்பறைகளும் இல்லாத காரணத்தால் மாணவர்கள் மரங்களின் நிழலில் அமர்ந்து பாடம் படிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தேர்தல் காலம் நெருங்கும் போது கணக்கு காட்டுவதற்காகவும், எங்கும் விளம்பர பலகைகள் வைப்பதற்காகவும், இறுதி நேரத்தில் கமிஷன் வசூலித்து அரசு நிதியை காலி செய்யவே திமுக ஆட்சியில் திட்டங்கள் தொடங்கப்படுகின்றன என்பதற்கு இந்த சம்பவமே தெளிவான உதாரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
“பொருநையைப் போற்றுகிறேன்” என்ற போர்வையில் புகைப்படக் காட்சிகளில் மட்டுமே கவனம் செலுத்தி, அரைமனப்பான்மையுடன் சில திட்டங்களை அறிவித்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்ளும் அறிவாலய அரசு, தனது விளம்பர வேட்டையாலேயே வீழ்ச்சி அடையும் நாள் வெகுதூரமில்லை என்றும் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.