வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்: சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, பொதுமக்களுக்கு தேவையான நிவாரண மற்றும் அடிப்படை வசதிகள் சரிவர உள்ளனவா என்பதை உறுதி செய்வதற்காக, சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று அதிகாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், வடகிழக்கு பருவமழைக்கான முன்னேற்பாடாக அமைக்கப்பட்டுள்ள மைய சமையல் கூடங்கள் மற்றும் தற்காலிக நிவாரண மையங்களில் தேவையான வசதிகள் பூரணமாக உள்ளனவா என்பதைக் கண்காணிப்பதே இந்த ஆய்வின் நோக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று அதிகாலையில் உதயநிதி ஸ்டாலின், திருவல்லிக்கேணி வெங்கட்ரங்கம் தெருவில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அமைக்கப்பட்ட மைய சமையல் கூடம் மற்றும் தற்காலிக நிவாரண மையத்தை நேரில் பார்வையிட்டு, அங்குள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, சிந்தாதிரிப்பேட்டை அய்யா தெருவில் உள்ள மைய சமையல் கூடத்தில் உணவு தயாரிக்க தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் தயாராக உள்ளதையும் அவர் பரிசீலித்தார்.
மேலும், சிந்தாதிரிப்பேட்டை மேற்கு கூவம் சாலையில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண மையத்தில் பொதுமக்கள் தங்குவதற்கான பாய், தலையணை போன்ற தேவைகள் தயார் நிலையில் உள்ளதையும் ஆய்வு செய்தார்.
பின்னர், சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட அண்ணாசாலை–ஜி.பி. சாலை சந்திப்புப் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளைவும் துணை முதல்வர் நேரில் பார்வையிட்டார்.
இந்த ஆய்வுகளின் போது, வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்யக்கூடிய கனமழைக்கு பொதுமக்கள் எந்தவித சிரமமும் அனுபவிக்காமல் இருக்க, அனைத்து துறைகளின் அதிகாரிகளும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.