நெல்லை வந்த முதல்வருக்கு கருப்புக்கொடி காட்ட முயற்சி – இந்து முன்னணி நிர்வாகிகள் கைது
நெல்லை மாவட்டத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கருப்புக்கொடி காட்ட முயன்ற இந்து முன்னணி நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சனிக்கிழமை நெல்லை மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலினின் பயணத்தை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் செயல்பாடுகளை கண்டித்து, முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் போராட்டம் நடத்த இந்து முன்னணியினர் திட்டமிட்டிருந்தனர்.
முதலமைச்சர் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கச் செல்ல இருந்த பாதையில், திடீரென திரண்ட இந்து முன்னணி நிர்வாகிகள் கருப்புக் கொடிகளை ஏந்தி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, இந்து முன்னணி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்து அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினர்.