காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெற்று வருகிறது
தமிழக காவல் துறையில் காலியாக உள்ள உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெற்று வருகிறது.
இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி வெளியிட்டிருந்தது. மொத்தமாக 1,299 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் உள்ள 46 தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வில் சுமார் 1 லட்சத்து 78 ஆயிரம் பேர் பங்கேற்று எழுதினர். சென்னை மாநகரில் மட்டும் 9 தேர்வு மையங்களில் இந்த எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.
தேர்வு நடைபெறும் மையங்களில் ஏற்பாடுகள் சரியாக உள்ளனவா என்பதை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய அதிகாரிகள், மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.
தேர்வில் முறைகேடுகளைத் தவிர்க்க, தேர்வர்களின் இடது கை கட்டைவிரல் ரேகை பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே, தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் 4,491 பேர் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த 5 தேர்வு மையங்களில், தேர்வர்களை கடுமையான சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதித்தனர்.
தேர்வு அமைதியாக நடைபெறுவதற்காக தென்காசி மாவட்டம் முழுவதும் சுமார் 600 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்