பள்ளி விழாவில் மயங்கி விழுந்த 6 வயது சிறுமி உயிரிழப்பு – மானாமதுரையில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சியின் போது, ஏஞ்சல் வேடமணிந்து வந்த 6 வயது சிறுமி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மானாமதுரையைச் சேர்ந்த இளங்கோ – பவானி தம்பதியரின் மகளான தேஜாஸ்ரீ, அப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயின்று வந்தார். கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் அவர் ஏஞ்சல் கதாபாத்திரத்தில் நடிக்கத் தயாராக இருந்தார்.
நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்த வேளையில், தேஜாஸ்ரீ திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் உடனடியாக அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால், அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
இந்தச் செய்தியால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், குழந்தையின் உடலைக் கண்டதும் கதறி அழுத காட்சி அங்கிருந்த அனைவரின் கண்களையும் கலங்க வைத்தது.