கன்யாகுமரி கடற்பகுதியில் 3 மீன்பிடி படகுகள் மீது சரக்கு கப்பல் மோதி விபத்து
கன்யாகுமரி மாவட்ட கடல் எல்லைப் பகுதியில், மூன்று நாட்டுப் படகுகள் மீது வெளிநாட்டு சரக்கு கப்பல் மோதியதில், படகுகள் மற்றும் அதிலிருந்த மீன்பிடி சாதனங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
வள்ளவிளை மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் இரண்டு விசைப்படகுகளிலும், கேரளாவைச் சேர்ந்த மீனவர்கள் ஒரு விசைப்படகிலும் கடந்த 17ஆம் தேதி தேங்காய்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 126 கடல் மைல் தொலைவில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்தனர்.
அந்த நேரத்தில், சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல், மீனவர்கள் பயணித்த விசைப்படகுகள் மீது திடீரென மோதியதாக கூறப்படுகிறது. விபத்து நிகழ்ந்த பிறகும், கப்பல் மாலுமி கப்பலை நிறுத்தி மீனவர்களை மீட்க முயற்சிக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டதாக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த மோதலில் மூன்று விசைப்படகுகளும் பெரும் சேதத்தைச் சந்தித்த நிலையில், அதில் பயணித்த பத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பின்னர், அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த மற்ற மீனவர்கள் விரைந்து உதவி செய்து, விபத்தில் சிக்கியவர்களை பாதுகாப்பாக தேங்காய்பட்டினம் துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர்.
இதனிடையே, சம்பந்தப்பட்ட கப்பல் மற்றும் அதன் மாலுமி மீது வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் மற்றும் அவர்களது சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.