உளுந்தூர்பேட்டையில் திமுக உட்கட்சிப் பிரச்சினை – எம்.எல்.ஏ இல்லத்தை முற்றுகையிட்டு கிராமவாசிகள் சாலை மறியல்
உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள பகுதியில் திமுக சார்ந்த இரு தரப்புகளுக்கிடையே ஏற்பட்ட மோதலால் சாலை அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், திமுக சட்டமன்ற உறுப்பினர் இல்லத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதூர் கிராமத்தைச் சுற்றியுள்ள சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு செல்லத் தேவையான முறையான சாலை வசதி இல்லாததால், அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக புதிய சாலை அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தக் கோரிக்கையை ஏற்று அரசு நிதி ஒதுக்கீடு செய்திருந்த நிலையில், சாலை பணிக்கான டெண்டரைப் பெறுவதில் திமுக மாவட்ட கவுன்சிலர் சுந்தரமூர்த்தி மற்றும் திமுக கிளைச் செயலாளர் வேல்முருகன் ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதில், வேல்முருகன் தரப்பினர் நீதிமன்றத்தை அணுகி, சாலை அமைப்பதற்கு இடைக்காலத் தடை உத்தரவு பெற்றதாக கூறப்படுகிறது. இதன் பின்னர், விவசாய விளைபொருட்களை வயல்களில் இருந்து கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டதால், கிராம மக்களே சாலை அமைக்கும் பணியில் இறங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து தகவலறிந்த திருநாவலூர் ஒன்றிய வளர்ச்சி அலுவலர், விவசாய நிலத்தில் சாலை அமைப்பது அனுமதிக்கப்படாது என அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் கடும் கோபமடைந்த 200-க்கும் அதிகமான கிராம மக்கள் மற்றும் விவசாயிகள், உளுந்தூர்பேட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் இல்லத்தை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.