பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபினுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
சென்னைக்கு வருகை புரிந்த பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபினை, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர்.
பாஜகவின் புதிய தேசிய செயல் தலைவராக பொறுப்பேற்ற பின்னர், அவர் முதன்முறையாக சென்னை வந்திருந்தார்.
இரு நாட்கள் கொண்ட பயணத்திற்காக தமிழகம் வந்த நிதின் நபினுக்கு, விமான நிலைய வளாகத்தில் பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டது. கட்சி கொடிகள், முழக்கங்கள் ஆகியவற்றுடன் தொண்டர்கள் அவரை வரவேற்றனர்.
இந்த நிகழ்வில், தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல். முருகன், மூத்த தலைவர்கள் ஹெச். ராஜா, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் நேரில் வந்து நிதின் நபினை வரவேற்றனர்.
அதேபோல், புதுச்சேரி மாநில பாஜக நிர்வாகிகளும் விமான நிலையத்தில் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், புதிய தேசிய செயல் தலைவரின் வருகை அரசியல் ரீதியாக முக்கியத்துவம் கொண்டது என குறிப்பிட்டார். மேலும், தமிழகத்திலும் புதுச்சேரியிலும் தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியாக ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.
இதற்குப் பிறகு புதுச்சேரி நோக்கிச் சென்ற நிதின் நபினை, பாதை முழுவதும் மக்கள் பூக்களைத் தூவி உற்சாகமாக வரவேற்றனர்.
வாகனத்தில் பயணித்தபடியே பொதுமக்களை நோக்கி கை அசைத்து நிதின் நபின் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வின்போது, புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.