திருப்பரங்குன்றம் மலை தர்காவிற்கு 4 பேர் சென்றதால் பரபரப்பு – பொதுமக்கள் எதிர்ப்பு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தர்காவிற்கு நால்வர் சென்றதை எதிர்த்து, அப்பகுதி மக்கள் காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் பகுதியில் தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம் தற்போது உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், மலைப்பகுதிக்கு செல்ல பொதுமக்களுக்கு காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.
இந்த நிலையில், மலைமேல் உள்ள தர்காவில் நடைபெறவுள்ள சந்தனக்கூடு விழாவிற்கான ஏற்பாடுகளை முன்னிட்டு, நான்கு பேர் அனுமதியுடன் மலைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
இதனை கண்ட கோட்டைத் தெருவைச் சேர்ந்த மக்கள், தங்களுக்கும் மலைக்கு செல்ல அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரி போலீசாருடன் கடும் வாதத்தில் ஈடுபட்டனர்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், காவல் ஆய்வாளர் ராஜதுரை மற்றும் உதவி காவல் ஆணையர் சசி பிரியா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.