மெரினா கடற்கரையில் நீதிபதிகள் நேரடி ஆய்வு மேற்கொள்ள தீர்மானம்
மெரினா கடற்கரையில் கடைகள் ஒதுக்கப்படுவது தொடர்பான வழக்கில், வரும் 22ஆம் தேதி நீதிபதிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.
சென்னை மெரினா கடற்கரையில் இயங்கி வரும் கடைகளை ஒழுங்குபடுத்துவது குறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார் மற்றும் ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது, சென்னை மாநகராட்சி ஆணையரும், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளரும் தங்களது அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். அதனுடன், கடைகள் அமைக்க திட்டமிடப்பட்ட பகுதிகளை விளக்கும் வரைபடங்களும் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வரைபடங்களை பரிசீலித்த நீதிபதிகள், கடைகள் அமைக்கப்பட உள்ள இடங்கள் குறித்த விவரங்கள் தெளிவற்றதாக இருப்பதாகக் குறிப்பிட்டனர். இதனைத் தொடர்ந்து, மெரினா கடற்கரைப் பகுதியில் கடைகள் அமைப்பது தொடர்பாக நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும் என முடிவு செய்ததாக தெரிவித்தனர்.
அதன்படி, வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ள இந்த ஆய்வில், சென்னை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், வருவாய்த் துறை மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் நீதிமன்றம் அறிவித்தது.