பிரசவ தேதி நெருங்கும் கர்ப்பிணிகளை அரசு மருத்துவமனைகளில் சேர்க்க சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவு
தமிழக சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம் தெரிவித்ததாவது:
மழைக்காலத்தில் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீர் தேங்காத வகையில் தேவையான கட்டமைப்பு ஏற்பாடுகளை உறுதிசெய்ய வேண்டும். மேலும், மின்சார விநியோகம் தடையின்றி நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டு, மாற்று ஏற்பாடாக ஜெனரேட்டர்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்று மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், தீவிர உடல்நிலை பாதிப்பில் உள்ளவர்கள் மற்றும் பிரசவ தேதி நெருங்கிய கர்ப்பிணிகளை முன்னதாகவே அடையாளம் கண்டு, அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.