அதிவேக ஆம்னி வேன் மோதல் – இருசக்கர வாகனம் சிதறி விபத்து!
நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் பகுதியில், வேகமாக வந்த ஆம்னி வேன் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நல்லிபாளையத்தைச் சேர்ந்த பூமதி என்பவர், பள்ளி முடிந்து வந்த தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் வீடு நோக்கிச் சென்றுள்ளார். அப்போது பெட்ரோல் நிலையம் அருகே சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக கட்டுப்பாடற்ற வேகத்தில் வந்த ஆம்னி வேன், இருசக்கர வாகனத்தின் மீது நேரடியாக மோதியது.
இந்த மோதலின் தாக்கத்தில் ஆம்னி வேன் கவிழ்ந்ததுடன், இருசக்கர வாகனமும் சாலையில் தூக்கி வீசப்பட்டது. இந்த விபத்தில் சிறுமி உட்பட மொத்தம் 7 பேர் கடுமையான காயங்களுக்கு உள்ளானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவத்தை நேரில் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.
இந்த விபத்துக்கான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.