திருச்செந்தூர் : அரசுப் பள்ளியில் வசதி குறைவு – வெளிப்புறத்தில் படிக்கும் மாணவர்கள்
திருச்செந்தூர் அருகே அமைந்துள்ள கீழநாலுமூலைக்கிணறு அரசு பள்ளியில், போதுமான வகுப்பறை வசதி இல்லாத காரணத்தால் மாணவர்கள் திறந்த வெளியில் அமர்ந்து பாடம் படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த பள்ளியில் தற்போது 100-க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். ஆனால், மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ற அளவில் வகுப்பறைகள் இல்லாததால், பள்ளி வளாகத்தின் வெளிப்புறப் பகுதியில் மாணவர்கள் கல்வி பயில வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
மேலும், தற்போது மழைக்காலம் நிலவி வரும் நிலையில், குளிர்ச்சியும் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இரண்டு மாதங்களுக்கு முன்பே புதிய வகுப்பறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டும், இதுவரை அது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை என பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர். மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை கருத்தில் கொண்டு, அந்த புதிய வகுப்பறைகளை உடனடியாக திறந்து பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.