திருவள்ளூர் : எரிவாயு சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஏற்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில், ஒரு வீடு முழுவதுமாக இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் கணவன்-மனைவி இருவரும் கடுமையாகக் காயமடைந்தனர்.
பொன்னேரியை அடுத்த உப்பரபாளையம் பகுதியில் வசித்து வரும் மணி என்பவரின் வீட்டில், அவரது மனைவி தேவி சமையல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென எரிவாயு கசிவு ஏற்பட்டு சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இந்த வெடிப்பின் தாக்கத்தால் வீடு இடிந்து விழுந்து, கணவன்-மனைவி இருவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயம் அடைந்தனர். அவர்களை உடனடியாக மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணியாளர்கள், தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். இதே விபத்தில் அருகிலுள்ள வீட்டில் வசித்து வந்த தாய் மற்றும் மகனுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.