சாதனை பெண்களுக்கு ‘பாரதி கண்ட புதுமைப்பெண்’ விருதுகள் – சுதா சேஷய்யன் வழங்கி மரியாதை
சென்னையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், பல்வேறு துறைகளில் சமூக சேவையும் சாதனைகளும் புரிந்த பெண்களுக்கு கல்வியாளர் சுதா சேஷய்யன் ‘பாரதி கண்ட புதுமைப்பெண்’ விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
சென்னை ஷெனாய் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ‘நவரச பாரதி’ என்ற பெயரில் இந்த விழா நடத்தப்பட்டது. இதில் கல்வியாளர் டாக்டர் சுதா சேஷய்யன் மற்றும் மகாகவி பாரதியாரின் கொள்ளுப் பேரன் நிரஞ்சன் பாரதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் போது, கல்வி, தொழில், சமூக சேவை உள்ளிட்ட பல துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி வரும் பெண்களுக்கு டாக்டர் சுதா சேஷய்யன் ‘பாரதி கண்ட புதுமை பெண்கள்’ விருதுகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சுயம் அறக்கட்டளை நிர்வாகி உமா, மகாகவி பாரதியின் பெயரில் விருது கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். உலகிலேயே முதன்முறையாக ஐசிஎஸ்சி பாடத்திட்டத்தை பொருளாதார ரீதியாக பின்தங்கிய குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கி வருவதாகவும், அந்தச் சேவைக்காக இந்த விருது வழங்கப்பட்டதில் பெருமை அடைவதாகவும் கூறினார்.
அதேபோல், விருது பெற்ற இட்லி கடை மேலாளர் கஸ்தூரி, இந்த கௌரவத்தை தன்னுடன் பணியாற்றும் அனைத்து பெண்களுக்கும் அர்ப்பணிப்பதாக தெரிவித்தார். தாம் ஆரம்பத்தில் கடைநிலை ஊழியராக பணியில் சேர்ந்ததாகவும், இன்று மேலாளர் பதவியை அடைந்துள்ளேன் என்றும் அவர் கூறினார்.
இதனை அடுத்து உரையாற்றிய விலங்கு நல ஆர்வலர் பிரியா ராம்குமார், தெரு நாய்களுக்கு உணவு வழங்கி அவற்றை பாதுகாப்பதோடு பராமரித்து வருவதற்காக இந்த விருது வழங்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், வாழும் இடங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வையும் தொடர்ந்து ஏற்படுத்தி வருவதாக அவர் கூறினார்.