திமுக ஆட்சிக்கெதிரான ‘கவுன்ட்டவுன்’ தொடங்கிவிட்டது – பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு
திமுக அரசின் காலம் முடிவடையப் போகிறது; அதன் ‘கவுன்ட்டவுன்’ ஆரம்பமாகிவிட்டது என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மதுரை கைத்தறி நகரில் பாஜக சார்பில் நடைபெற்ற முன்மாதிரி கிராம சபைக் கூட்டத்தில் நயினார் நாகேந்திரன், பாஜக பொதுச்செயலாளர் ராம சீனிவாசன், செயலாளர் கதலி நரசிங்க பெருமாள், மாவட்ட தலைவர் சிவலிங்கம், மாவட்ட பார்வையாளர் ராஜரத்தினம், அதிமுக ஐடி பிரிவு செயலாளர் ராஜ்சத்யன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன் கூறியதாவது:
“மதுரையில் பாஜக சார்பில் தேர்தல் சுற்றுப்பயணம் தொடங்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே 168 தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்துள்ளார். விரைவில் என்டிஏ சார்பில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடைபெறும். அதில் பாஜக தேசிய தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்வார்கள். இந்த சுற்றுப்பயணத்தின் போது கிராமங்களுக்கு நேரில் சென்று மக்களின் குறைகளை கேட்டு, அதற்கான தீர்வுகளை தேர்தல் அறிக்கையில் இணைப்போம்,” என்றார்.
அவர் மேலும் கூறுகையில்,
“திமுக அரசு மக்களின் நலனை விட பணம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆட்சி விரைவில் முடிவடையும். அதன் ‘முகூர்த்த நாள்’ கூட தீர்மானிக்கப்பட்டுவிட்டது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மக்கள் மன உளைச்சலில் உள்ளனர். இந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர மக்கள் தயாராக உள்ளனர். மின்சார கட்டணம், சொத்து வரி உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து மக்களிடம் பேசுவோம்,” என்றார்.
“தமிழக மக்கள் அனைத்துத் தரப்பினரும் திமுக ஆட்சியால் அதிருப்தியில் உள்ளனர். ஆட்சிக்கு வந்ததும் பழைய ஓய்வூதியம் வழங்குவதாக கூறினார்கள்; ஆனால் இதுவரை நிறைவேற்றவில்லை. தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் நடத்தியபோது அவர்களை மிரட்டி வெளியேற்றினர். திமுக அரசு போல் நீதிமன்றங்களின் கேள்விகளுக்கு உள்ளான அரசு வேறு எதுவும் இல்லை,” எனவும் கூறினார்.
அவர் மேலும், “கரூரில் 41 உயிரிழப்புக்கு அரசு மற்றும் காவல்துறை நேரடி பொறுப்பு. தினமும் கொலைகள் நடக்கின்றன. கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் வழங்கி, விபத்தில் இறந்தவர்களுக்கு 2 லட்சம் மட்டுமே தருகின்றனர். திமுக எம்எல்ஏ மருத்துவமனையில் சிறுநீரக திருட்டு சம்பவம் நடந்துள்ளது; ஆம்ஸ்டிராங் கொலை செய்யப்பட்டார் — எல்லா இடங்களிலும் திமுக பின்னணியே உள்ளது. இதனால் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான கவுன்ட்டவுன் தொடங்கியுள்ளது. என்டிஏ ஆட்சியை அமைக்கும்; அதன் முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்பார்,” என்றார்.
அவர் மேலும் கூறுகையில்,
“தமிழகம் இன்று பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது பின்தங்கியுள்ளது. மாநில அரசு செயல்படுத்தும் அனைத்து திட்டங்களும் மத்திய அரசின் திட்டங்களே. மற்ற மாநிலங்கள் தமிழகத்தை ஏளனமாகப் பார்க்கும் நிலை வந்துள்ளது. அதனால் பாஜக தொடங்கிய இந்த சுற்றுப்பயணத்திற்கு ‘தமிழகம் தலைநிமிர் — தமிழினம் பயணம்’ என பெயரிடப்பட்டுள்ளது,” என்றார்.
கரூர் சம்பவம் குறித்து அவர் கூறுகையில், “தவெகவுக்கு ரவுண்டானாவில் சிறிய இடம் கொடுத்துள்ளனர்; இதனால் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. சிலர் சாக்கடையில் விழுந்து உயிரிழந்தனர். சம்பவம் நடந்தவுடன் அமைச்சர் செந்தில்பாலாஜி வந்தார்; அவர் வருவதற்கு முன்பே ஆம்புலன்ஸ் தயாராக இருந்தது. ரவுடிகள் பெண்களிடம் மோசமாக நடந்துள்ளனர். இதற்கெல்லாம் திமுக அரசு தான் காரணம். எல்லா ஊர்களிலும் கலைஞர் பெயர் வைக்கிறார்கள் — ஒரு இடத்தில் வைத்தால் போதாதா? இதை ஏன் அனுமதிக்கிறார்கள்?” எனக் கேள்வி எழுப்பினார்.