திமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், திமுக ஆட்சிக் காலத்தில் பெண்களை குறிவைக்கும் குற்றச் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாகக் கூறினார்.
அப்போது, கிரிவலம் சென்ற ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை, அவரது தாயின் கண்முன்னே இரு காவலர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தை சுட்டிக்காட்டி பேசினார்.
மேலும், தமிழக காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாகவும், ஒரு டிஜிபியைக் கூட நியமிக்க முடியாத அளவுக்கு நிர்வாக குழப்பம் நிலவுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்ட போதும், அதை அமல்படுத்த காவல்துறை தயக்கம் காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் நீதியும் தர்மமும் வெற்றி பெறும் என்றும் நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்தார்.