திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றக் கோரி தீக்குளித்து உயிர்நீத்த இளைஞர்
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, முருக பக்தர் ஒருவர் தன்னைத் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த பூர்ணசந்திரன் குடும்பத்தினருக்கு, தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், திருப்பரங்குன்றம் தீபத்தூண் தொடர்பான வழக்கில் அரசியல் நோக்கத்தால் திமுக அரசு நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த மறுத்ததன் விளைவாக, பூர்ணசந்திரன் தனது உயிரையே தியாகம் செய்துள்ள செய்தி தன்னை சொல்ல முடியாத வேதனையில் ஆழ்த்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். அரசின் பிடிவாதத்தால் உயிரிழந்த ஒருவரின் குடும்பத்தினரை எவ்வாறு ஆறுதல் கூறுவது என்றே தெரியாமல் தவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டு உரிமைகளை பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும் நீண்ட காலமாக போராடி வருவதாகக் குறிப்பிட்டுள்ள நயினார் நாகேந்திரன், எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றை உடைத்து தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என உறுதி தெரிவித்துள்ளார். நேர்மையான பார்வையுடனும், அறநெறியின் துணையுடனும் போராட்டக் களத்தில் ஒன்றிணைந்து நிற்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேசமயம், எந்த சூழலிலும் தற்கொலை என்பது தீர்வாக இருக்க முடியாது என்றும், இனிமேல் இதுபோன்ற துயர சம்பவங்கள் நிகழாத வகையில் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேபோல், மத்திய அமைச்சர் எல்.முருகனும் இரங்கல் தெரிவித்து, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதைக் கோரி முருக பக்தர் பூர்ணசந்திரன் தீக்குளித்து உயிரிழந்தது மிகுந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் அளிப்பதாக கூறியுள்ளார். எந்த காரணத்திற்காகவும் தற்கொலை செய்வது சரியான தீர்வல்ல என்றும், நீதிமன்றத்தின் பார்வையில் உள்ள ஒரு பொது விவகாரத்திற்காக உயிரை மாய்த்துக் கொள்வது தங்களின் கொள்கைக்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுபோன்ற வருத்தகரமான முடிவுகளை எவரும் எடுக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே, பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஓட்டு அரசியல், பதவி ஆசை மற்றும் பண லாபத்திற்காக பெரும்பான்மை மக்களின் நம்பிக்கைகளை புறக்கணித்து, சிறுபான்மை வாக்குகளுக்காக ஒரு உயிர் பலியாகியுள்ளது என அவர் குற்றம் சாட்டினார். இந்தச் சம்பவத்தை உணர்ச்சி வசப்பட்ட நிகழ்வாகவோ அல்லது மத விவகாரமாகவோ சித்தரிப்பவர்கள், நீட் தேர்வு விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா மரணத்தை திமுக எவ்வாறு அரசியல் செய்தது என்பதை மறக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நீட் தேர்வுக்கு மத்திய அரசே காரணம் என பொய்யான பிரசாரம் செய்து அரசியல் லாபம் தேடிய திமுக அரசே, பூர்ணசந்திரன் உயிரிழப்புக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்பதை மக்கள் உணர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.