அலங்காநல்லூர் : அமைக்கப்படாத கழிவுநீர் கால்வாய்க்கு நிதி செலுத்தல் – ஆர்டிஐ பதில் அதிர்ச்சி
அலங்காநல்லூர் அருகே உள்ள கிராமத்தில் இன்னும் கட்டப்படாத கழிவுநீர் கால்வாய்க்கு அரசுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக ஆர்டிஐ மூலம் தெரிய வந்ததால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகிலுள்ள அச்சம்பட்டி ஊராட்சியின் கிழக்கு தெருவில், புதிய கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்காக ரூ.1 லட்சத்து 46 ஆயிரம் ஒதுக்கப்பட்டிருந்தது.
ஆனால், நிலப்பரப்பில் எந்தவிதமான கால்வாய் பணிகளும் மேற்கொள்ளப்படாத நிலையில், கால்வாய் அமைத்ததாக பதிவுசெய்து ஊராட்சி நிர்வாகம் பணத்தை பெற்றுள்ளது என்பது தெரிய வந்தது. இதை கண்டறிந்த கோபி என்ற இளைஞர், வட்டார வளர்ச்சித் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
எனினும், அதிகாரிகளிடமிருந்து உரிய பதில் கிடைக்காததால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அவர் விண்ணப்பம் செய்துள்ளார். அதற்கு வந்த பதிலில், கழிவுநீர் கால்வாய் பணி நிறைவடைந்ததாகவும், அதற்கான தொகை ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோபி, கால்வாய் இல்லாததால் கழிவுநீர் தேங்கி தாங்க முடியாத துர்நாற்றம் பரவி வருவதாகக் கூறி வேதனை தெரிவித்தார்.
மேலும், பணிகளை சரியாக நிறைவேற்றாத அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.