ஆண்டாள் அலங்காரத்தில் திமுக எம்பி – கடும் கண்டனம்
ஆண்டாள் தோற்றத்தில் தன்னை அலங்கரித்து திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் பகிர்ந்துள்ளதற்கு, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், சனாதன தர்மத்தை அவமதிக்கும் வகையில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் தமிழச்சி தங்கப்பாண்டியன், இந்துக்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். அதே நேரத்தில், ஆண்டாள் தாயார் வேடம் அணிந்து சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியிட்டு பிரபலமடைய முயல்வது இரட்டை முகத்தனமாக உள்ளது என அவர் விமர்சித்துள்ளார்.
ஆண்டாள் தாயாரை குறித்து திமுக கவிஞர் வைரமுத்து அவதூறாக பேசியபோது, தமிழச்சி தங்கப்பாண்டியன் மௌனம் காத்தது ஏன் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
மேலும், இந்து சமய தெய்வங்களை கம்யூனிஸ்ட் தலைவர்கள் மற்றும் திமுக பேச்சாளர்கள் கேலி செய்தபோதும் அமைதியாக இருந்த தமிழச்சி தங்கப்பாண்டியன், தற்போது யாரை ஏமாற்ற ஆண்டாள் அலங்காரம் செய்துள்ளார் என வினவியுள்ளார்.
அடுத்ததாக இஸ்லாமிய பெண் வேடத்திலும், கிறிஸ்தவ கன்னியாஸ்திரி தோற்றத்திலும் புகைப்படங்களை வெளியிடுவார் என எதிர்பார்ப்பதாகவும் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.
சனாதனம் என்ற பெயரில் இந்து தர்மத்தை அழிக்க முயலும் தமிழச்சி தங்கப்பாண்டியனின் இரட்டை நடிப்பை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.