ஜனவரி 1 முதல் ‘பாரத் டாக்சி’ செயலி தொடக்கம்
ஓலா, ஊபர், ராபிடோ போன்ற தனியார் டாக்சி சேவைகளுக்கு மாற்றாக, மத்திய அரசு சார்பில் ‘பாரத் டாக்சி’ என்ற புதிய செயலி ஜனவரி 1ஆம் தேதி முதல் அறிமுகமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஆட்டோ, கார் மற்றும் இருசக்கர வாகனப் பயண சேவைகளை தனியார் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இந்த செயலிகளை கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வரும் சூழலில், அரசு முன்னெடுக்கும் புதிய முயற்சியாக பாரத் டாக்சி செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த சேவை ‘சஹாகர் டாக்சி’ எனும் கூட்டுறவு அமைப்பின் கீழ் செயல்படவுள்ளதுடன், எந்தவித கமிஷன் பிடித்தமும் இல்லாத முழுமையான பூஜ்ஜிய கமிஷன் முறையில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் டாக்சி செயலிகளைப் போல இடைநிலை கட்டணக் கழிவு இன்றி, ஓட்டுநர்களுக்கு நேரடியாக வருமானம் சென்றடையும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஜனவரி மாதத்தில் டெல்லியிலும், பிப்ரவரி மாதத்தில் குஜராத்திலும் இந்த சேவை தொடங்கப்படவுள்ளது. பின்னர், மேலும் 20 நகரங்களுக்கு விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.