சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் – தமிழக அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு
சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளாமல் தமிழக மக்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏமாற்றியுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே, சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி அன்புமணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பாஜக, நாம் தமிழர் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட 22 அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் பங்கேற்றன.
இந்த ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு மேடையில் உரையாற்றிய அன்புமணி, பீகாரில் நிதிஷ் குமார் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றதற்கு முக்கிய காரணங்களாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதும், மது விலக்கு அமல்படுத்தப்பட்டதும்தான் எனத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சாதிகளின் உண்மையான சமூக மற்றும் பொருளாதார நிலையை அறிய சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்றும், அதனை அடிப்படையாகக் கொண்டால்தான் சமூகநீதி உறுதியாக நடைமுறைக்கு வரும் என்றும் அவர் கூறினார்.
மேலும், சமூகங்களுக்கிடையே மோதலை உருவாக்குவதில் திமுக தேர்ச்சி பெற்றுள்ளதாக விமர்சித்த அன்புமணி, முஸ்லிம் சமூகத்தை திமுக வாக்கு வங்கியாக பயன்படுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டினார். அதிகாரமும் சட்ட ரீதியான வாய்ப்புகளும் இருந்தபோதும் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளாத முதலமைச்சர் ஸ்டாலினை வரலாறு மன்னிக்காது என்றும் அவர் தெரிவித்தார்.