‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ நிறைவு விழா – புதுக்கோட்டையில் இடம் தேர்வு
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணத்தின் நிறைவு நிகழ்ச்சி நடைபெறவுள்ள புதுக்கோட்டை பகுதியில், நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பயணம் செய்து வரும் நயினார் நாகேந்திரனின் இந்தச் சுற்றுப்பயணம், புதுக்கோட்டையில் நடைபெறும் நிறைவு விழாவுடன் முடிவடைய உள்ளது.
இந்த முக்கிய நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை முன்னிட்டு, விழா நடைபெறும் இடம் முழுவதும் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதே நேரத்தில், பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் காவல்துறையினர் நிகழ்ச்சி நடைபெறவுள்ள பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் தீவிர ஆய்வு மற்றும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.