மழைநீருடன் கழிவுநீர் கலந்ததால் சாலையில் தேக்கம் – போக்குவரத்து பாதிப்பு
சென்னைக்கு அருகிலுள்ள பூந்தமல்லி பகுதியில், மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் தேங்கி நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பெய்த மிதமான மழையின் காரணமாக, பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மழைநீருடன் கழிவுநீர் ஒன்றிணைந்து சாலையில் நிறைந்தது.
இதன் விளைவாக, அந்தப் பகுதியில் வாகனங்கள் மெதுவாக நகர வேண்டிய சூழல் உருவாகி, வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்தனர்.
குறிப்பாக, பூந்தமல்லி–ஆவடி சாலை மற்றும் பூந்தமல்லி–வேலப்பன்சாவடி பைபாஸ் சர்வீஸ் சாலைகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
மேலும், தேங்கி நிற்கும் கழிவுநீரால் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பாதிப்படைந்து வருவதோடு, தொற்று நோய்கள் பரவும் அபாயமும் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.