நவம்பர் 21-ல் மீண்டும் திரைக்கு வருகிறதாம் ‘ப்ரண்ட்ஸ்’!
விஜய் மற்றும் சூர்யா இணைந்து நடித்த பிரபலமான படம் ‘ப்ரண்ட்ஸ்’ நவம்பர் 21-ஆம் தேதி மறுவெளியீடு செய்யப்படுகிறது.
சமீபகாலமாக விஜய்யின் பழைய வெற்றிப்படங்கள் ரசிகர்களின் கோரிக்கையின்படி மீண்டும் திரையரங்குகளில் வெளிவந்து வருவது குறிப்பிடத்தக்கது. ‘கில்லி’, ‘சச்சின்’ ஆகிய படங்களுக்குப் பிறகு இப்போது ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படமும் அதே வரிசையில் இணைகிறது.
2001-ஆம் ஆண்டு மறைந்த இயக்குநர் சித்திக் இயக்கிய இந்த நகைச்சுவை படம், வெளியான காலத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதில் விஜய், சூர்யா, தேவயானி, வடிவேலு, ராதாரவி, விஜயலட்சுமி, ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
படம் முழுவதும் பரவியிருந்த நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் ரசிக்கப்படுகின்றன. குறிப்பாக வடிவேலு நடித்த “நேசமணி” கதாபாத்திரம் ரசிகர்களிடம் அதீத பிரபலமடைந்து, பின்னர் “#PrayForNesamani” என்ற ஹேஷ்டேக் உலகளாவிய ட்ரெண்டாக மாறியது.
இப்போது, அந்த நினைவுகளை மீண்டும் உயிர்ப்பிக்க, ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் டிஜிட்டல் வடிவில் 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு, நவம்பர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட உள்ளது. இதற்கான புதிய போஸ்டரும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
படக்குழுவினர், இம்முறை திரைக்கு வரும் ‘ப்ரண்ட்ஸ்’ ரசிகர்களிடையே மீண்டும் பெரும் வரவேற்பைப் பெறும் என நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.