அரசுப் பள்ளி கட்டடப் பணியில் ஏற்பட்ட விபத்து : இரண்டாம் தளத்திலிருந்து விழுந்த 15 வயது சிறுவன் பலி
சென்னை எம்.ஜி.ஆர். நகரில் நடைபெற்று வந்த அரசுப் பள்ளி கட்டுமான பணியின்போது, இரண்டாம் மாடியில் இருந்து தவறி விழுந்த 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எம்.ஜி.ஆர். நகர் காமராஜர் தெருவில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்ததையடுத்து, புதிய கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்தப் பணியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஆசிஸ் பேரா என்பவர், தனது 15 வயது மகன் சௌமன் பேராவுடன் சேர்ந்து ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்த போது, இரண்டாம் தளத்தில் இருந்து சிறுவன் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். உடனடியாக அங்கிருந்த தொழிலாளர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்தக் கட்டுமானப் பணியில் சிறுவனை வேலைக்கு பயன்படுத்தியவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.