உதகையில் தொடர்ந்து 2வது நாளாக கடும் உறைபனி தாக்கம்!
உதகை பகுதியில் இரண்டாவது நாளாகவும் கடுமையான உறைபனி நிலவுவதால், பொதுமக்களின் அன்றாட வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் வழக்கமாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கடும் குளிர் நிலவுவது இயல்பாக இருந்தாலும், இந்த ஆண்டு உதகை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உறைபனி தீவிரமாகக் காணப்படுகிறது.
2வது நாளாகவும் அதிகரித்த உறைபனி காரணமாக, புல்வெளி மைதானங்கள் பனித்துளிகளால் முத்துக்கள் தூவப்பட்டதைப் போல காட்சியளிக்கின்றன. அதேபோல், நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களின் மேற்பரப்புகளிலும் பனி அடர்த்தியாகப் படர்ந்துள்ளது.
மலைப் பகுதிகளில் விளையும் கேரட், பீட்ரூட் உள்ளிட்ட தோட்டக் காய்கறிகள் முழுவதும் வெள்ளைத் தாளால் மூடப்பட்டதுபோல் உறைபனி படர்ந்துள்ளதால், பயிர்கள் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
உறைபனி தாக்கத்தால் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் வேலை செய்ய முடியாமல் அவதிப்படுகின்ற நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் முடங்கியுள்ளது.