பிறப்பு விகித உயர்வுக்காக கருத்தடை பொருட்களுக்கு வரி உயர்த்தும் சீனா
மக்கள் தொகை சரிவை எதிர்கொள்ளும் சீனா, பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் கருத்தடை மருந்துகள் மற்றும் சாதனங்களுக்கு கூடுதல் வரி விதிக்க தீர்மானித்துள்ளது.
1980 முதல் 2015 ஆம் ஆண்டு வரை “ஒரு குழந்தை போதும்” என்ற கட்டுப்பாட்டு கொள்கையை கடுமையாக அமல்படுத்திய சீனா, தற்போது அதன் விளைவாக மக்கள் தொகை குறையும் நிலையை எதிர்கொண்டு வருகிறது.
இந்தச் சூழலில், குடும்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ஒரு குடும்பத்திற்கு மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கி, மக்களை குழந்தை பெற்றுக்கொள்ள அரசாங்கம் ஊக்குவித்து வருகிறது.
கருத்தடை சாதனங்களின் விலை உயர்வால் அவற்றின் பயன்பாடு குறைந்து, பிறப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற கணிப்பின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, வருகிற ஜனவரி 1 முதல் கருத்தடை மாத்திரைகள், ஆணுறைகள் உள்ளிட்ட பொருட்கள் வரி விலக்கு பட்டியலில் இருந்து நீக்கப்படுவதுடன், அவற்றுக்கு 13 சதவீத மதிப்புக் கூட்டு வரி விதிக்கப்பட உள்ளது.