ட்ரம்ப் வரி உத்தரவுக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் – இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட 50% வரியை நீக்க கோரிக்கை
இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விதித்துள்ள 50 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்யக் கோரி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வரிவிதிப்பு சட்டத்திற்குப் புறம்பானது என்றும், இந்தியா–அமெரிக்கா இருநாட்டு உறவுகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
“பரஸ்பர வரி” என்ற பெயரில் இந்தியப் பொருட்களுக்கு முதலில் 25 சதவீத வரி விதித்த ட்ரம்ப் நிர்வாகம், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வருவதை காரணமாகக் காட்டி, கூடுதலாக மேலும் 25 சதவீத வரியை விதித்தது. இதனுடன், மறு அறிவிப்பு வரும் வரை இந்தியாவுடன் எந்தவிதமான வர்த்தகப் பேச்சுவார்த்தையும் நடைபெறாது எனவும் அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
இந்த நடவடிக்கையால் இந்தியப் பொருட்களுக்கு மொத்தமாக 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. இது முற்றிலும் நியாயமற்ற முடிவு என்றும், இறுதியில் அமெரிக்க நுகர்வோரே அதிக விலைச் சுமையைச் சந்திக்க நேரிடும் என்றும் பொருளாதார மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தனர்.
இந்தச் சூழ்நிலையில், அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களான டெபோரா ராஸ் (Deborah Ross), மார்க் வீஸி (Marc Veasey) மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி (Raja Krishnamoorthi) ஆகியோர் இணைந்து, இந்தியா மீது விதிக்கப்பட்ட வரியை ரத்து செய்யும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளனர்.
ஏற்கனவே, பிரேசில் மீது விதிக்கப்பட்ட வரிகளை எதிர்த்து, அவசரகால அதிகாரங்களை பயன்படுத்தி அதிபர் வரி விதிப்பதை கட்டுப்படுத்தும் வகையில் இரு கட்சி செனட் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாகவே இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக, சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டம் (IEEPA) என்ற சட்டத்தின் கீழ், கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி இந்தியா மீது விதிக்கப்பட்ட கூடுதல் 25 சதவீத வரியை முழுமையாக ரத்து செய்வதே இந்த தீர்மானத்தின் முக்கிய நோக்கமாகும்.
வட கரோலினா மாநில நாடாளுமன்ற உறுப்பினர் மார்க் வீஸி, இந்தியாவுடனான வர்த்தகமும் முதலீடும் அந்த மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு பெரும் ஆதாரமாக உள்ளதாகக் குறிப்பிட்டார். இந்திய நிறுவனங்கள் வட கரோலினாவில் ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்து, ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகவும், அங்கிருந்து லட்சக்கணக்கான பொருட்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், இந்தியா மீது விதிக்கப்பட்ட வரி, உண்மையில் சாதாரண வட டெக்சாஸ் மற்றும் அமெரிக்க மக்கள் மீது விதிக்கப்படும் வரியே தவிர, இந்தியாவை மட்டும் பாதிக்கும் நடவடிக்கை அல்ல என்றும் மார்க் வீஸி குற்றஞ்சாட்டினார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி, ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த வரிவிதிப்பு, அமெரிக்காவின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, விநியோகச் சங்கிலிகளைச் சீர்குலைத்து, தொழிலாளர்களுக்கு சிரமத்தையும் நுகர்வோருக்கு கூடுதல் செலவையும் ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், இந்தியா மீது விதிக்கப்பட்ட வரியை ரத்து செய்தால், இருநாடுகளுக்கிடையேயான பொருளாதார உறவுகளும், பாதுகாப்பு கூட்டுறவும் மேலும் வலுப்பெறும் என்றும் அவர் தெரிவித்தார். அதிபர் ட்ரம்பின் தன்னிச்சையான வரிவிதிப்பு முடிவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள இந்த தீர்மானம், இந்தியா–அமெரிக்கா உறவை மீண்டும் உறுதியான பாதைக்கு கொண்டு வரக்கூடிய முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.