H-1B விசா கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு – ட்ரம்ப் அரசுக்கு எதிராக 18 மாகாணங்கள் வழக்கு
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ள H-1B வேலைவாய்ப்பு விசா கட்டண உயர்வுக்கு எதிராக, கலிபோர்னியா உள்ளிட்ட 18 மாகாணங்களைச் சேர்ந்த சட்டத்துறை தலைவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்தக் கட்டண உயர்வு அமெரிக்காவின் கல்வி மற்றும் சுகாதார அமைப்புகளைப் பெரிதும் பாதிக்கும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதிபர் பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ச்சியாக கடுமையான குடியேற்றக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் ட்ரம்ப் நிர்வாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் H-1B விசாவுக்கான விண்ணப்பக் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி உத்தரவிட்டது. புதிய உத்தரவின்படி, விசா கட்டணம் இந்திய மதிப்பில் சுமார் 88 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு, புதிய விண்ணப்பங்களுக்கு மட்டுமல்லாமல், ஏற்கனவே உள்ள விசாக்களின் புதுப்பித்தலுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டது.
இந்த விதிமுறை கடந்த செப்டம்பர் 21 முதல் அமலுக்கு வந்ததாகவும், ஒரு ஆண்டுக்காலம் நடைமுறையில் இருக்கும் என்றும் ட்ரம்ப் அரசு தெரிவித்திருந்தது. சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், இதனால் அமெரிக்காவுக்கு வேலைக்குச் செல்லும் திறமையான வெளிநாட்டு பணியாளர்கள், குறிப்பாக இந்தியர்கள், கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என பல தொழில்நுட்ப மற்றும் மருத்துவ நிறுவனங்கள் கவலை தெரிவித்தன.
இந்தச் சூழலில்தான், கலிபோர்னியா மற்றும் மேலும் 18 மாகாணங்களைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சி சார்ந்த அட்டர்னி ஜெனரல்கள், H-1B விசா கட்டண உயர்வை எதிர்த்து ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை கலிபோர்னியா அட்டர்னி ஜெனரல் ராப் போன்டா மற்றும் மாசசூசெட்ஸ் மாநிலத்தின் ஆண்ட்ரியா ஜாய் கேம்ப்பெல் ஆகியோர் முன்னின்று நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு, H-1B விசா கட்டண உயர்வு தொடர்பாக ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 49-வது வழக்காகும். சான் பிரான்சிஸ்கோவில் செய்தியாளர்களைச் சந்தித்த ராப் போன்டா, இந்தக் கட்டண உயர்வு மருத்துவமனைகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்கும் நிறுவனங்களுக்கு பெரும் பொருளாதார சுமையாக மாறும் என தெரிவித்தார்.
கலிபோர்னியா உள்ளிட்ட பல மாகாணங்களில் ஏற்கனவே ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும், புதிய விசா கட்டணம் அந்தச் சிக்கலை மேலும் தீவிரப்படுத்தும் என்றும் அவர் கூறினார். கடந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் உள்ள பள்ளி மாவட்டங்களில் 74 சதவீதம், சிறப்பு கல்வி, வெளிநாட்டு மொழிகள் மற்றும் அறிவியல்-தொழில்நுட்ப-பொறியியல்-கணிதம் (STEM) போன்ற துறைகளில் காலியாக இருந்த பணியிடங்களை நிரப்ப முடியாமல் தவித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாடு முழுவதும் சுமார் 30,000 கல்வியாளர்கள் மட்டுமே H-1B விசாவை பயன்படுத்தி பணியாற்றி வருவதாகவும், பல கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி பணிகளுக்காக வெளிநாட்டு நிபுணர்களைச் சார்ந்திருப்பதாகவும் ராப் போன்டா கூறினார். குறைந்த நிதியில் இயங்கும் அரசுப் பள்ளிகள், இத்தகைய அதிக கட்டணத்தைச் செலுத்தி புதிய ஆசிரியர்களை நியமிப்பது சாத்தியமற்றது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதேபோல், சுகாதாரத் துறையிலும் இந்தக் கட்டண உயர்வு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், தேவையான மருத்துவப் பணியாளர்கள் கிடைக்காததால் பொதுமக்களின் ஆரோக்கியம் ஆபத்துக்குள்ளாகும் என்றும் அவர் எச்சரித்தார். மேலும், இந்த புதிய கட்டணம் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தையும், நிர்வாக நடைமுறைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பொது ஆலோசனை விதிகளையும் மீறுவதாக குற்றம்சாட்டினார்.
காங்கிரஸின் ஒப்புதல் இல்லாமல் H-1B விசா கட்டணத்தை உயர்த்த அதிபருக்கு அதிகாரம் இல்லை என்றும், ஒருதலைப்பட்ச முடிவுகள் மூலம் குடியேற்றச் சட்டங்களை மாற்ற முடியாது என்றும் வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பும் சட்ட நடவடிக்கைகளும் அதிகரித்து வருவதாகவும், இது அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தடையாக அமையும் என்றும் அரசியல் மற்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.