திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக அதிரடி வெற்றி!
கேரள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி பாஜக சாதனை படைத்துள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள மொத்தம் 1,200 உள்ளாட்சி அமைப்புகளில் 1,199 அமைப்புகளுக்கு கடந்த 9 மற்றும் 11ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடித்து, மாநில அரசியல் வரலாற்றில் முக்கியமான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
101 வார்டுகள் கொண்ட மாநகராட்சியில், NDA கூட்டணி 50 வார்டுகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையை எட்டியது. இதனால் ஆளும் இடதுசாரி கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் மாநகராட்சியில் LDF 29 வார்டுகளிலும், UDF 19 வார்டுகளிலும் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. மேலும், சாஸ்தாமங்கலம் பகுதியிலிருந்து பாஜக சார்பில் போட்டியிட்ட முன்னாள் டிஜிபி ஸ்ரீலேகா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்தவ சமூகத்துக்கும் வக்பு வாரியத்துக்கும் இடையே சர்ச்சைக்குரிய பகுதியாகக் கருதப்பட்ட முனம்பம் பகுதியில் கூட NDA கூட்டணி வெற்றியை உறுதி செய்துள்ளது.
இதன் மூலம், கேரள மாநிலத்தில் முதல் முறையாக மாநகராட்சியை கைப்பற்றி பாஜக வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது.