திமுக ஆட்சியில் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அளித்த முக்கியத்துவம் என்ன? – மரகதம் மீனாட்சி கேள்வி
திமுக மத்தியிலும் மாநிலத்திலும் அதிகாரத்தில் இருந்த காலகட்டங்களில் எத்தனை சுதந்திர போராட்ட வீரர்களுக்கு உரிய மரியாதையும் முக்கியத்துவமும் வழங்கப்பட்டது என்று வ.உ.சி.யின் பேத்தி மரகதம் மீனாட்சி கேள்வி எழுப்பியுள்ளார்.
மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா, தமிழகத்தில் வடமாநில சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்களில் சாலைகள், மருத்துவமனைகள் உள்ளிட்டவை உள்ளதாகவும், அதேபோல் வட இந்தியாவில் வ.உ.சி. உள்ளிட்ட தமிழ்ச் சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்களில் சாலைகள் உள்ளதா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், பொள்ளாச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய மரகதம் மீனாட்சி, தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புகளை பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளில் எடுத்துரைத்து வருவதாகவும், அதனை உணராமல் தமிழக அரசு தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகவும் விமர்சனம் செய்தார்.
மேலும், திமுக மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தபோது, எத்தனை சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறுகள் பள்ளிப் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன என்பதை விளக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதே நேரத்தில், ‘வந்தே மாதரம்’ குறித்த சிறப்பு விவாதத்தின் போது பிரதமர் மோடி வ.உ.சி. மற்றும் மகாகவி பாரதியார் குறித்து குறிப்பிட்டுப் பேசியதற்கு மரகதம் மீனாட்சி நன்றியை தெரிவித்தார்.