போடி திமுக கவுன்சிலர் – ஏலக்காய் வியாபாரத்தில் ₹100 கோடி வரி தவிர்ப்பு குற்றச்சாட்டு
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் ஒருவர், ஏலக்காய் வியாபாரத்தின் மூலம் பெரிய அளவில் வரி தவிர்த்ததாகவும், அதை அடிப்படையாகக் கொண்டு ₹100 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகள் சேர்த்திருப்பதாகவும் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் கூறியுள்ளனர்.
போடி நகரின் 29வது வார்டு கவுன்சிலராக உள்ள சங்கர், கடந்த ஏழு மாதங்களில் ஏலக்காய் வியாபாரத்தில் சுமார் ₹1,200 கோடி வரையிலான பரிவர்த்தனைகள் செய்ததாக தகவல் கிடைத்துள்ளது. இதன் மூலம் சுமார் ₹70 கோடியை வரியாக செலுத்தாமல் ஏய்த்ததாக வருமான வரித்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் பின்னர், சங்கரின் போடி இரட்டை வாய்க்கால் பகுதியில் உள்ள ஏலக்காய் கையிருப்பு கிடங்கு மற்றும் அவரது இல்லத்தில் கடந்த ஐந்து நாட்களாக வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை இணைந்து விசாரணை மற்றும் சோதனைகளை நடத்தியுள்ளன.
இச்சோதனைகளில், சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஏலக்காய் வியாபாரம் தொடர்பாக வரியை தவிர்த்து, பெருமளவில் சொத்துக்கள் சேர்த்திருப்பதற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளதாக ED அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சர்ச்சைக்குரிய சொத்துக்கள் பற்றிய முழுமையான பட்டியல் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், சங்கரின் மகன் லோகேஷ் வடஇந்தியாவில் சுமார் 3,000 கிலோ ஏலக்காய் அனுப்பி, சட்டவிரோத நிதி பரிவர்த்தனைகளில் ஈடுபட்டது குறித்து விசாரணை தொடர்கிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.