கடல் நீரிலிருந்து குடிநீர் + பசுமை ஹைட்ரஜன்… உலகின் முதல் தொழிற்சாலையைத் திறந்து சீனா கவனம் ஈர்ப்பு!
கடல் நீரை நேரடியாக பயன்படுத்தி, ஒரே நேரத்தில் குடிநீரையும் பசுமை ஹைட்ரஜனையும் குறைந்த செலவில் தயாரிக்கும் உலகின் முதல் தொழிற்சாலையை சீனா செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. ஷாண்டாங் மாகாணத்தின் ரிஜாவோ நகரில் தொடங்கியுள்ள இந்த நவீன தொழிற்சாலை, உலக எரிசக்தி துறையின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடல் நீரில் உள்ள உப்பு மற்றும் கனிமங்களால் electrolysis கருவிகள் சேதமடைவது, மிக உயர்ந்த மின்சாரச் செலவு போன்ற பிரச்சினைகள் காரணமாக, இதுபோன்ற தொழில்நுட்பம் இதுவரை தொழில்துறை அளவில் சாத்தியமாகவில்லை. ஆனால் சீனா, துருப்பிடிக்காத சிறப்பு தொழில்நுட்பம் மற்றும் அருகிலுள்ள ஆலைகளில் இருந்து கிடைக்கும் கழிவு வெப்பத்தை பயன்படுத்தி, இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டதாக அறிவித்துள்ளது.
இந்த தொழிற்சாலையில் 800 டன் கடல் நீரை பயன்படுத்தி, ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான பேருந்துகளை இயக்கும் அளவுக்கு பசுமை ஹைட்ரஜன் தயாரிக்க முடியும் எனவும், அதோடு சுத்தமான குடிநீரும் தொழில்துறைக்கு தேவையான உப்புநீரும் உருவாகும் எனவும் பணிபுரியும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, ஒரு கன மீட்டர் குடிநீரை தயாரிக்க சீனாவில் வெறும் 2 யுவான் (சுமார் ₹24) மட்டுமே செலவாகும். இதே அளவு நீருக்காக
- சவுதி–யுஎஇ–யில் ₹42 வரை
- அமெரிக்கா (கலிஃபோர்னியா)–வில் ₹180 வரை
செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல்நீர் சுத்திகரிப்பு, பசுமை எரிபொருள் மற்றும் தொழில்துறை வெப்ப மீள்பயன்பாடு ஆகிய மூன்றையும் ஒருங்கே நிறைவேற்றும் இந்த தொழிற்சாலை, வருங்காலத்தில் உலக எரிசக்தி துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.