எச்1பி விசாவுக்கு 1 லட்சம் டாலர் கட்டணம் — யார் யாருக்கு? அமெரிக்கா விளக்கம்
அமெரிக்காவில் பணியாற்ற வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் எச்1பி (H1B) விசா கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலராக (சுமார் ₹88 லட்சம்) உயர்த்தியதற்கான விளக்கத்தை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2025 செப்டம்பர் 21க்குப் பிறகு புதிதாக எச்1பி விசாவுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் மட்டுமே இந்த புதிய கட்டணத்தை செலுத்த வேண்டும். அதேபோல், முன்னர் எச்1பி விசா மறுக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பித்தாலும் அவர்களுக்கும் இதே கட்டணம் பொருந்தும்.
ஆனால், செப்டம்பர் 21-ம் தேதிக்குள் ஏற்கெனவே எச்1பி விசா பெற்றவர்களோ அல்லது அதற்கு முன்னர் விண்ணப்பித்தவர்களோ இந்த புதிய கட்டணத்திலிருந்து விலக்கு பெறுவார்கள். மேலும், தற்போது எச்1பி விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவுக்குள் அல்லது வெளியே பயணிப்பதற்கு எந்தத் தடையும் இல்லை என USCIS தெரிவித்துள்ளது.
எச்1பி விசா என்றால் என்ன?
அமெரிக்காவில் தற்காலிகமாக பணியாற்றுவோருக்கு வழங்கப்படும் விசாவே எச்1பி விசா. இது முக்கியமாக தொழில்நுட்ப நிபுணர்கள், ஆய்வாளர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் போன்ற சிறப்பு திறனுடையவர்களுக்கு வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க அரசு 65,000 எச்1பி விசாக்களையும், அமெரிக்காவில் உயர்கல்வி முடித்த வெளிநாட்டு மாணவர்களுக்கு கூடுதலாக 20,000 விசாக்களையும் வழங்குகிறது. இதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு மொத்தம் 85,000 எச்1பி விசாக்கள் வழங்கப்படுகின்றன.
ஒருமுறை எச்1பி விசா பெற்றவர்கள் 3 ஆண்டுகள் வரை அமெரிக்காவில் பணியாற்ற அனுமதிக்கப்படுவர்; தேவையெனில் மேலும் 3 ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம்.
இந்தியர்கள் அதிகம்!
சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்காவில் தற்போது சுமார் 7.5 லட்சம் பேர் எச்1பி விசாவில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுடன் அவர்களின் குடும்பத்தினர்கள் சேர்த்து மொத்தம் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் இந்த விசா அடிப்படையில் அமெரிக்காவில் வசிக்கின்றனர்.
இதில் சுமார் 71 சதவீதம் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய கட்டண உயர்வுக்கான ஆணையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார், மேலும் இந்த நடைமுறை உடனடியாக அமலில் வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.