“அடுத்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அரசு மதுரையில் தோற்கடிக்கப்படும்” – நயினார் நாகேந்திரன்
மதுரை நகரின் வளத்தை மாநகராட்சி வரி முறைகேடுகளின் மூலம் குறைத்து விட்ட திமுக அரசை, மதுரை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் வெளியிட்ட தனது பதிவில் அவர் கூறியதாவது:
2021-ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிகளில் 54ஆம் எண்ணில், தெற்கு மாவட்டங்களுக்கென மதுரையில் தனி வேளாண் பல்கலைக்கழகம் அமைப்பதாக கூறியிருந்தீர்கள்; அதை நிறைவேற்றினீர்களா, முதல்வர் ஸ்டாலின் அவர்களே?
விழா மேடைகளில் “வளர்ச்சி அரசியல்” பற்றி பேசும் திமுக அரசு, மதுரைக்காக என்ன செய்துள்ளது? வாக்குறுதியான வேளாண் பல்கலைக்கழகத்தைக் கூட அமைக்காதது மட்டுமின்றி, மெட்ரோ திட்டத்தின் அறிக்கையை திட்டமிடும் போது திறமையற்ற அணுகுமுறையால் திட்டத்தை தாமதப்படுத்தி, மதுரையின் முன்னேற்றத்தை முடக்கியது என்று அவர் குற்றம் சாட்டினார்.
திமுக அமைச்சர்களின் உட்கழுக்களில் ஏற்பட்ட மோதல்களின் விளைவாக மதுரை இந்தியாவின் மிக அதிக அசுத்தமான நகரங்களில் முதலிடத்திற்குச் செல்வதற்கே தள்ளப்பட்டதோடு, இதற்கு மேலாக சுமார் ரூ.150 கோடி அளவில் மாநகராட்சி வரியில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடு, மதுரையின் வளர்ச்சியையே சுரண்டிவிட்டது என்றும் அவர் கூறினார்.
மக்களின் தேவைகளையும் வாக்குறுதிகளையும் புறக்கணித்து, குடும்ப அரசியலையே முன்னிறுத்தும் திமுக ஆட்சியை, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மதுரை மக்கள் கண்டிப்பாக நிராகரிப்பார்கள் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்.