புவிசார் அரசியலில் புதிய திருப்பத்தை உருவாக்கும் சபாஹர் துறைமுகம்!
பாகிஸ்தானுடன் ஏற்பட்ட மனக்கசப்பு அதிகரித்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் இந்தியாவிடம் மேலும் நெருக்கம் தேடி வருகிறது. இந்த மாற்றத்தின் மையக் காரணமாக, ஈரானில் அமைந்துள்ள சபாஹர் துறைமுகமே இன்று முக்கியப் பங்கு வகிக்கிறது.
சமீபத்தில், ஆப்கானிஸ்தான் துணைப் பிரதமர் முல்லா அப்துல் கனி பரதார் வெளியிட்ட உத்தரவில், பாகிஸ்தானுடன் நடைபெறும் வர்த்தகங்களை 90 நாட்களுக்குள் முற்றாக குறைக்க வேண்டும் என அறிவித்தார். இதைத் தொடர்ந்து, இந்தியா–ஆப்கானிஸ்தான் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளில், சபாஹர் துறைமுகத்தை முழுமையாக சீரமைத்து இயக்குவது, சுங்க மற்றும் வங்கி செயல்முறைகளை எளிமைப்படுத்துவது போன்ற பல நடவடிக்கைகள் குறித்து இரு நாடுகளும் இணக்கத்தை பெற்றன.
வணிக விசாக்கள் விரைவாக வழங்குதல், சபாஹர் துறைமுகத்தில் இருந்து தொடர்ச்சியான கப்பல் பாதைகள் தொடங்குதல், நிம்ரூஸ் மாகாணத்தில் புதிய உலர் துறைமுகங்கள் உருவாக்குதல், நவா சேவா துறைமுகத்தில் ஆப்கானிஸ்தான் பொருட்களுக்கு தனி வசதிகள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல துறைகளில் மேம்பாட்டு திட்டங்கள் வரைவு செய்யப்பட்டுள்ளது. மருந்து உற்பத்தி, குளிர் சேமிப்பு தளங்கள், பழ பதப்படுத்தல் ஆலைகள், எஸ்எம்இ மையங்கள், ஏற்றுமதி செயலாக்க மண்டலங்கள் ஆகியவற்றில் கூட்டு முதலீடு செய்யவும் இரு நாடுகளும் சம்மதித்துள்ளன.
இந்தியா–ஆப்கானிஸ்தான் வர்த்தகத்தில் சபாஹர் துறைமுகம் இப்போது முக்கிய சங்கிலி. இந்தியா நிர்வகிக்கும் இந்த துறைமுகம் ஓமான் வளைகுடாவிற்கு மிக அருகில் அமைந்துள்ளதால், பாகிஸ்தானை தவிர்த்து இந்தியாவிலிருந்து மத்திய ஆசியாவிற்கு ஆப்கானிஸ்தான் நேரடி அணுகலைப் பெறுகிறது. உஸ்பெகிஸ்தானும் தனது வர்த்தகத்தை அதிகரிக்க சபாஹர் துறைமுகத்தைப் பயன்படுத்த முயல்கிறது.
சர்வதேச வடக்கு–தெற்கு போக்குவரத்து வழித்தடமான INSTC திட்டம் 2000ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதனுடன் இணைந்துள்ள சபாஹர், இந்தியா, ஈரான், ரஷ்யா மற்றும் ஐரோப்பாவை ஒன்றிணைக்கும் சுருக்கமான வர்த்தக நெடுஞ்சாலையாக மாறியுள்ளது. இதன் மூலம் சரக்கு போக்குவரத்து நேரமே அல்ல, செலவுகளும் கணிசமாக குறைகின்றன.
ஆர்மீனியா துருக்கி, ஜார்ஜியா, அஜர்பைஜான், ஈரான் ஆகியவற்றுடன் எல்லை பகிர்ந்து கொள்ளும் தன்மை காரணமாக, கருங்கடல் பகுதி மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் பாலமாக செயல்படுகிறது. இதனால், இந்தியா–ஈரான்–ஆர்மீனியா முத்தரப்பு ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
சபாஹர் வழியாகும் வர்த்தகம், மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பாவுடன் இந்தியாவின் வணிக உறவுகளை பல மடங்கு உயர்த்தும் என நிபுணர்கள் கணிக்கின்றனர். இந்தியா கட்டிய ஜரஞ்ச்–டெலாராம் நெடுஞ்சாலையுடன் இணைந்து, பல்வேறு போக்குவரத்து முறைகளுக்கு ஏற்ற ஒரு ஒருங்கிணைந்த வர்த்தகப்பாதை உருவாகியுள்ளது.
இந்தியப் பொருட்கள் முதலில் கடல் வழியாக சபாஹருக்குச் செல்வது, அங்கு இருந்து ஆப்கானிஸ்தானுக்கு நகர்த்தப்படுவது போன்ற ஒரு உறுதிப்படுத்தப்பட்ட அமைப்பு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
2023 அக்டோபர் 17 அன்று, பாகிஸ்தான் பாதையைத் தவிர்த்து, முதன்முறையாக ஆப்கானிஸ்தான் தன் பொருட்களை சபாஹர் துறைமுகம் வழியாக இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியது. மேற்கு ஆப்கானிஸ்தானின் ஜரஞ்ச் நகரிலிருந்து 570 டன் உலர் பழங்கள், துணி, கம்பளங்கள் மற்றும் கனிமப் பொருட்கள் 23 லாரிகளில் சபாஹருக்குப் போக, அங்கிருந்து மும்பைக்குப் பரிமாறப்பட்டது.
இது ஆப்கானிஸ்தானை இறக்குமதி நாடு என்ற சின்னத்திலிருந்து ஏற்றுமதியாளராக மாற்றிய ஒரு முக்கிய தருணமாக இருந்தது. முன்னதாக 2017ஆம் ஆண்டு, சபாஹர் துறைமுகம் வழியாக 1.1 மில்லியன் டன் கோதுமையை இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியது. அதே ஆண்டில், இந்தியா–ஆப்கானிஸ்தான் இடையே நேரடி விமான சரக்கு சேவையும் தொடங்கப்பட்டது.
சர்வதேச வடக்கு–தெற்கு வழித்தடத்தை மையமாகக் கொண்டு, ஆப்கானிஸ்தானில் இந்தியா ஏற்படுத்திய வர்த்தக உள்கட்டமைப்பு அந்த நாட்டை பிராந்திய வர்த்தக வலையில் இணைத்துள்ளது. பாகிஸ்தானின் நிழலில் இருந்து விலக விரும்பும் ஆப்கானிஸ்தான், இந்தியாவுடன் நெருக்கமாக இணைந்து வருகிறது.
பாகிஸ்தான் மூடிய கதவை, சபாஹர் துறைமுகத்தின் மூலம் இந்தியா திறந்து வைத்துள்ளது. இது இன்றைய புவிசார் அரசியலில் ஒரு மாபெரும் மாற்றத்தைக் குறிக்கிறது.