சபரிமலை தங்கம் கடத்தல் வழக்கு: விசாரணைக்கு கூடுதல் ஒரு மாத அவகாசம்
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் நடைபெற்று வரும் விசாரணையை நிறைவு செய்ய, மேலும் ஒரு மாத கால நீட்டிப்பை வழங்கிக் கேரள உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
சபரிமலை கோயிலுக்குச் சொந்தமான தங்கம் முறைகேடாக எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் இந்த வழக்கில், திருவிதாங்கூர் தேவசம் போர்டின் முன்னாள் தலைவர் உட்பட பல உயரதிகாரிகள் என மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளனர்.
இந்த வழக்கை ஆறு வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என, சிறப்பு புலனாய்வு குழுவுக்கு கேரள உயர்நீதிமன்றம் முன்பே அறிவுறுத்தி இருந்தது.
அந்த குறிப்பிட்ட காலக்கெடு முடிவடைந்த நிலையில், தேவையான ஆதாரங்களை சேகரிக்க கூடுதல் நேரம் தேவைப்படுவதாகக் கூறி, சிறப்பு புலனாய்வு குழு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
அதை ஆய்வு செய்த நீதிமன்றம், விசாரணையை முடிக்க மேலும் ஒரு மாத கால அவகாசம் வழங்கி, அதற்கான உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.