தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் கார்த்திகை தீப விழா சிறப்பாக நிறைவு – பக்தர்கள் பெரும் திரளாக தரிசனம்
தமிழகத்தின் பல்வேறு திவ்யத்தலங்களிலும், முக்கிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று இறைவனை பணிவுடன் வழிபட்டனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகிலுள்ள 2,000 அடி உயரத்தில் அமைந்த, ‘தென் திருவண்ணாமலை’ என்று அழைக்கப்படும் திடியன் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. “தென்னாடுடைய சிவனே போற்றி” என முழங்கிய பக்தர்கள் மலையேறி தீபத் தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஏரிக்கரையில் அமைந்த கால பைரவர் சுவாமி கோயிலில், 165 கிராமங்கள் இணைந்து நடத்திய கார்த்திகை தீபத்திருவிழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. கோயில் சன்னதியில் மகா தீபம் ஏற்றப்பட்டபோது, பெருமளவிலான பக்தர்கள் தீபத்தை ஏற்றி சிவபெருமானை அர்ச்சனை செய்தனர்.
சென்னைக்கு அருகேயுள்ள குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி மலைத் திருத்தலத்தில் 12 அடி உயரமுள்ள தூணில் தீபம் ஏற்றப்பட்டு, அதன் பின்னர் பனை ஓலையால் ஆன சொக்கப்பனை எரிக்கப்பட்டது. மழை தூறலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் “அரோகரா” என முழக்கமிட்டு பங்கேற்றனர்.
ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலில், பச்சரிசி மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பல ஆயிரம் பக்தர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் அரோகரா என்ற பக்தி முழக்கத்துடன் தரிசனம் செய்தனர்.
கள்ளக்குறிச்சியில் திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடந்தது. பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.
சேலம் மாவட்டம் ஏற்காடு அருகில் தலைச்சோலை அண்ணாமலையார் மலைக் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. சுற்றுலாப் பயணிகளும் பெருமளவில் பங்கேற்று தீபத்திருவிழாவைக் கண்டுகளித்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள காந்தல் காசி விச்வநாதர் கோயிலில் 21 அடி உயர தீபத்தூணில் மகா தீபம் ஏற்றப்பட்டு, சந்தணக்காப்பு அலங்காரத்தில் விளங்கிய சுவாமியை பக்தர்கள் மனமுருகி வணங்கினர்.
கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் விளக்குகள் ஏற்றி வழிபட்டனர். அந்த விளக்குகள் “நொய்யல்” என்ற எழுத்தாக ஒளிர்ந்த காட்சி பக்தர்களை மெய்மறக்கச் செய்தது.
சென்னை வடபழனி முருகன் கோயிலில் சொக்கப்பனை கொளுத்தும் விழா நடைபெற்றது. பலர் கூரையுடன் மழையில் காத்திருந்து விழாவைக் கண்டனர்.
திருச்சி மலைக்கோட்டையில் உள்ள உச்சி பிள்ளையார் கோயிலில், வழக்கம்போல் மகா தீபம் ஏற்றப்பட்டது. சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்றபின், 50 அடி உயர கோபுரத்தின் மேலிருந்த கொப்பரையில் தீபம் வைக்கப்பட்டது.
துறையூர் காசி விச்வநாதர் கோயிலில், 80 ஆண்டுகளுக்குப் பிறகு அம்பாள் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. பின்னர் சொக்கப்பனை ஏற்றப்பட்டது.
தென்காசி பண்பொழி திருமலைக் குமாரசுவாமி கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை நிகழ்வும் சிறப்பாக நடை பெற்றது.
சிவகங்கை அருகே திருமலை கிராமத்தில் உள்ள மலைக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் ஓம் நமசிவாய முழக்கத்தோடு பக்தர்கள் மலை உச்சி தீபத்தை தரிசித்தனர்.
குன்றக்குடி கோயிலில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டு, வள்ளி-தெய்வானையுடன் சண்முகநாதர் எழுந்தருளினார். சொக்கப்பனை, பரணி தீபம் ஆகிய நிகழ்வுகளும் நடந்தது.
நெல்லை பாபநாசநாதர் கோயிலில் 10 அடி உயர சொக்கப்பனை ஏற்றப்பட்டு, பக்தர்கள் பெருமளவில் சாமி தரிசனம் செய்தனர்.
பெரம்பலூர் எளம்பலூர் பிரம்மரிஷி மலை உச்சியில் 43வது ஆண்டு கார்த்திகை தீபம் 5 அடி செப்பு கொப்பரையில், 2100 மீட்டர் திரி, 1008 லிட்டர் நெய், 108 கிலோ கற்பூரம் பயன்படுத்தி ஏற்றப்பட்டது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை ஸ்ரீ குமாரமலை பாலதண்டாயுதபாணி கோயிலில் மகா தீபம் ஏற்றி, பக்தர்கள் வழிபட்டனர்.
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் பரணி தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றப்பட்டு, பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு, சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மூவேந்தர் ஊர்வலம் நடைபெற்றது. பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.