உலக நம்பிக்கையை இழக்கும் நிலையிலான வங்கதேசம்!
வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலுள்ள இடைக்கால அரசு மேற்கொள்ளும் முரண்பாடான வர்த்தக முடிவுகள் காரணமாக, இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளின் நம்பிக்கை குறைந்து வருகிறது. இந்த நிலை குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
முகமது யூனுஸ் அமைத்துள்ள இடைக்கால நிர்வாகத்தின் கொள்கைகள் தெளிவில்லாதது காரணமாகவே, உலக நாடுகள் எப்போதும் சந்தேகத்துடனே அந்த அரசைக் கவனித்து வந்தன. குறிப்பாக, சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என அறிவித்து, பின்னர் அதே விஷயத்தில் அமெரிக்காவுடன் உடன்படிக்கை செய்தது இந்த நம்பிக்கையின்மைக்கான முக்கிய எடுத்துக்காட்டாக இருக்கிறது என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
அரசின் ஒரு பேச்சு – ஒரு செயல்பாடு என்ற முறையில் நடக்காத நடவடிக்கைகள் காரணமாக, யூனுஸ் மீது சர்வதேச அளவில் சந்தேகப் பார்வை அதிகரித்துள்ளது. இதன் தாக்கமாக, இதுவரை நிலைத்திருந்த இந்தியா–வங்கதேச வர்த்தக உறவுகளிலும் குழப்பம் உருவாகியுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
சாலை வழியாக நடைபெற்ற வர்த்தகம் முடங்கியதால், இந்தியாவில் இருந்து குறைந்த விலையில் பெற்றிருந்த அரிசியை இனி சிங்கப்பூரில் இருந்து அதிக செலவில் வாங்க வேண்டிய நிலைக்கு வங்கதேசம் தள்ளப்பட்டுள்ளது. அதேபோல், அமெரிக்காவுடன் திடீரென செய்து வைத்த ஒப்பந்தத்தை முன்னிறுத்தி, ஜப்பானும் புதிய நிபந்தனைகளை விதிப்பதால், இரண்டு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் சுணக்கம் அடைந்துள்ளது.
அமெரிக்க வாகனங்களுக்கு இறக்குமதி வரி குறைக்கப்பட்டதுபோல், ஜப்பான் தயாரிப்புகளுக்கும் அதே சலுகை வழங்க வேண்டும் என ஜப்பான் அழுத்தம் கொடுத்து வருகிறது. இதனால், இரண்டு நாடுகளுக்கிடையே முன்பே திட்டமிடப்பட்டிருந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தாமதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆசிய நாடுகள் மட்டுமல்லாமல், ஐரோப்பிய நாடுகளுடனும் வங்கதேசம் இதேபோன்ற சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. அமெரிக்க ஒப்பந்தத்தின் படி போயிங் விமானங்களை வாங்க ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, பிரான்ஸ் தங்களது ஏர் பஸ் விமானங்களையும் வாங்க வேண்டும் என்று வங்கதேசத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது.
இதனால், முகமது யூனுஸ் அரசு பல திசைகளிலும் பின்னடைவுகளை சந்தித்து வருகிறது. மிகப்பெரிய பாதிப்பாக, இதுவரை கிடைத்துவரும் பொருளாதார சலுகைகள் குறைந்து, வங்கதேசம் பலவித நெருக்கடிகளில் சிக்கியுள்ளது.
மேலும், குறைந்த வளர்ச்சியுடைய நாடுகளின் பட்டியலில் இருந்து வங்கதேசம் நீக்கப்பட்டதால், சர்வதேச உதவிகள் கிடைக்காமல், அந்த நாடு பொருளாதார ரீதியில் திணறி வருகிறது. ஷேக் ஹசீனா ஆட்சி அகற்றப்பட்டபின் அமைக்கப்பட்ட இடைக்கால அரசின் நிர்வாகத் திறனின்மை இந்தச் சூழல்களால் வெளிப்படுவதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.