நாடாளுமன்றத்திற்கு நாயுடன் வந்த காங்கிரஸ் எம்.பி – பரபரப்பு!
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி. ஒருவர் தனது காரில் நாயைக் கொண்டு வந்த சம்பவம் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
குளிர்கால கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகி டிசம்பர் 19 வரை நடைபெற உள்ளது. நாடு முழுவதும் இருந்து எம்.பி.க்கள் வருகை தரும் நிலையில், அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததாகிய சம்பவம் இது.
காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சௌத்ரி, நாடாளுமன்ற வளாகத்திற்குள் வரும் போது தனது காரில் ஒரு நாய்க் குட்டியையும் வைத்திருந்தார். நாடாளுமன்றத்தில் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகள் நடைமுறையில் உள்ள நிலையில், ஒரு எம்.பி. நாயுடன் வருவது சர்ச்சையாக மாறியது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் விளக்கமளித்தபோது,
நாடாளுமன்றம் நோக்கி பயணிக்கும் போது சாலையில் அலைந்து திரிந்த நாய்க் குட்டி விபத்தில் சிக்கக்கூடும் என்ற இரக்கத்தால், அதை பாதுகாப்பாக எடுத்துச் சென்றதாக கூறினார். மேலும், அந்த நாயை காருடன் மீண்டும் வெளியே அனுப்பிவிட்டதாகவும் தெரிவித்தார்.
பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை நேரடியாகக் குறிப்பிடாமல் விமர்சிக்கும் வகையில் பேசியதால், அரசியல் வட்டாரங்களில் இது குறித்து பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ளன.